ரேசன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் 3 பேர் சஸ்பெண்டு
- தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் பறக்கும்படை தனி தாசில்தார் முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த 30-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த லாரியில் 3 டன் அளவில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தின் போது லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரது செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் பதிவான அழைப்புகளை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேனியைச் சேர்ந்த ஒச்சு, லாரி டிரைவர், லோடு மேன் பீமன், நுகர்பொருள் வாணிப கழக இளநிலை தர நிர்ணய ஆய்வாளர் தமிழ்செல்வன், எழுத்தர் சுரேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் இந்துமதி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை கலெக்டருக்கு அளித்தனர்.
அந்த அறிக்கையில் குடோன் இறநிலை தரஆய்வாளர் தமிழ்செல்வன், பட்டியல் எழுத்தர்கள் சுரேஷ், சதாசிவம் ஆகியோர் ஒச்சு, டிரைவரை பலமுறை செல்போனில் அழைத்து பேசியுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனா பரிந்துரையின் பேரில் தமிழ்செல்வம், சுரேஷ், சதாசிவம் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து மண்டல முதுநிலை மேலாளர் உத்தரவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.