திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள துணிகள் திருட்டு- மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் கைது
- தனிப்படை போலீசார் பனியன் நிறுவனத்திற்கு சென்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
- தலைமறைவாக இருந்த நாகேந்திரன் மற்றும் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மங்கலம் சாலையில் தனியார் பனியன் உற்பத்தி நிறுவனம் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பனியன் உற்பத்திக்கான துணிகளை வைப்பதற்காக நிறுவன வளாகத்தில் குடோன் உள்ளது. அங்கு சாயமேற்றப்பட்ட பனியன் துணிகள் வைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பனியன்களுக்கும், அதற்காக வாங்கி வைக்கப்பட்டு இருந்த துணிகளுக்கும் இடையே வித்தியாசம் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக ஒரு பனியன் ரோலில் இருந்து 50 பனியன்கள் வரை தயாரிக்கலாம். ஆனால் சில மாதங்களாக 20 முதல் 25 பனியன்கள் வரையே தயாரிக்க முடிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பனியன் நிறுவனத்தினர் ஆய்வு செய்த போது குடோனில் இருந்த பனியன் துணிகள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அந்நிறுவனத்தின் மேலாளர் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் கார்த்திக்கேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜமுனா, போலீஸ்காரர்கள் பிரசாந்த், பிரகாஷ், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பனியன் நிறுவனத்திற்கு சென்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் பனியன் நிறுவனம் மற்றும் குடோனில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது, அதில் அந்நிறுவனத்தின் குடோன் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த நாகேந்திரன் (வயது 51) என்பவர் அதிகாலை நேரத்தில் குடோனில் இருந்த பனியன் உற்பத்தி துணிகளை திருடி வாகனத்தில் ஏற்றி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதைத்தொடர்ந்து நாகேந்திரனிடம் போலீசார் விசாரிக்க முயன்ற போது அவர் திடீரென தலைமறைவானார். தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர். மேலும் நாகேந்திரன் திருடிய பனியன் துணிகளை திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே நிறுவனம் நடத்தி வந்த ஆறுமுகம் என்பவரிடம் விற்பனை செய்து வந்துள்ளார். ரூ.600 மதிப்புள்ள துணியை ஆறுமுகத்திற்கு ரூ.200க்கு விற்பனை செய்துள்ளார். சுமார் 7300 கிலோ வரையிலான துணிகளை நாகேந்திரன் திருடி விற்றுள்ளார். அதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும்.
இந்தநிலையில் தலைமறைவாக இருந்த நாகேந்திரன் மற்றும் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் நாகேந்திரன் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள பனியன் துணிகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். பனியன் துணிகளை திருடி விற்றதில் கிடைத்த ரூ.22 லட்சம் பணத்தை நாகேந்திரன் வங்கியில் டெபாசிட் செய்திருந்தார். அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நாகேந்திரன், ஆறுமுகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் துணிகளை திருடி விற்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.