நாளை மறுநாள் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை பங்கேற்பு
- கூட்டணி கட்சி என்ற ரீதியில் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
- சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
சென்னை:
பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
பா.ஜனதா, காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளன. ஆனால் தமிழகத்தல் தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றன.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடைபெறுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. எனவே அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளுமா? புறக்கணிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் கூட்டணி கட்சி என்ற ரீதியில் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக செல்வ பெருந்தகையிடம் கேட்ட போது, முதல்வர் அழைத்துள்ளார். கலந்து கொள்ளத்தான் வேண்டும். காங்கிரஸ் ஆதரிக்கிறதே என்கிறீர்கள். இதுவும் காங்கிரஸ் கொண்டு வந்ததுதான்.
கட்சி என்ன நிலைப்பாட்டில் உள்ளதோ அதுவே எங்கள் நிலைப்பாடும். எனவே கூட்டத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார்.
இதேபோல் அகில இந்திய அளவில் இந்த இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் கூட்டத்தில் பங்கேற்கிறது.
இது தொடர்பாக மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணனிடம் கேட்ட போது, நாங்கள் கலந்து கொள்கிறோம். கூட்டத்தில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம் என்றார்.