மேட்டுப்பாளையத்தில் மழைக்கு கடையின் சுவர் இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி
- மழைக்கு கடையின் சுவர் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இதனிடையே நேற்றிரவும் பலத்த மழை பெய்தது. இரவில் தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு பல சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
மேட்டுப்பாளையம் காந்திபுரம் 3-வது வீதியை சேர்ந்தவர் பழனிசாமி(வயது63). கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதிகளில் உள்ள கடையோரங்களில் இரவில் படுத்து தூங்குவது வழக்கம். நேற்றிரவு அங்கு புதுப்பித்து கட்டப்பட்டு வரும் ஒரு கடையின் அருகே படுத்து தூங்கினார்.
நேற்றிரவு தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், புதுப்பிக்கப்பட்டு வரும் கடையின் சுவர் மற்றும் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் கடையின் கீழே படுத்திருந்த பழனிசாமி சிக்கி கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இடிபாடுகளை அகற்றி, இறந்த பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மழைக்கு கடையின் சுவர் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.