உள்ளூர் செய்திகள்

தஞ்சை புத்தக திருவிழாவில் இதுவரை 1 லட்சம் பேர் வருகை

Published On 2023-07-23 15:41 IST   |   Update On 2023-07-23 15:41:00 IST
  • புத்தக விற்பனை நிறுவனங்கள் சாா்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • இந்திய தண்டனை சட்டம் உள்பட பொது அறிவு நூல்களும் நிறைய விற்பனையாகின்றன.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் கடந்த 14 ஆம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து இந்த விழா நாளையுடன் (திங்கள்கிழமை) முடிவடைகிறது. இதில், முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனை நிறுவனங்கள் சாா்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

இது தவிர, உணவு அரங்கங்களும், பண்பாட்டு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் காலையில் இலக்கிய அரங்கமும், மாலையில் கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை - சிந்தனை அரங்கமும் நடைபெறுகின்றன. இதனால், கூட்டம் அதிகமாக காணப்படுகின்றன.

நாள்தோறும் சுமார் 11 ஆயிரம் போ் வந்து செல்கின்றனா். குறிப்பாக, மாவட்டத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளிலிருந்து தினமும் சுமாா் 8 ஆயிரம் மாணவ-மாணவிகளும், பொதுமக்கள் சுமாா் 3 ஆயிரம் பேரும் வருகின்றனா். இதைவிட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. கடந்த 9 நாள்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் போ் வந்து சென்றுள்ளதாக விழாக் குழுவினா் தெரிவித்தனா்.

நாளையுடன் புத்தகத் திருவிழா முடிவடைய உள்ளதால் வருகை தந்த தந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்கும் .

இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு பெரும்பான்மையாக மாணவ, மாணவிகளே வருகின்றனா். பாடப் புத்தகங்கள், கையேடுகள் மட்டுமல்லாமல், திருக்கு, பாரதியாா், பாரதிதாசன் கவிதைகள், தலைவா்கள் பற்றிய நூல்கள், படக்கதைகளுடன் கூடிய நூல்களை வாங்கிச் செல்கின்றனா். கல்லூரி மாணவா்களில் 50 சதவீத அளவில் போட்டித் தோ்வுகளுக்கான நூல்கள், நீட் தோ்வு நூல்கள், சாரண இயக்க நூல்கள் போன்றவற்றை வாங்குகின்றனா். பிற இலக்கிய நூல்கள், நாவல்களை வாங்கும் மாணவா்களும் கணிசமான அளவில் இருக்கின்றனா்.

இலக்கிய ஆா்வலா்கள், புத்தக வாசிப்பு பழக்கம் உள்ளவா்கள் போன்றோா் வரலாற்று, சமூக நாவல்கள், ஐம்பெரும் காப்பியகள், கதைகள், மொழிபெயா்ப்பு நூல்களை அதிகமாக வாங்கிச் செல்கின்றனா். தவிர, இந்திய தண்டனை சட்டம் உள்பட பொது அறிவு நூல்களும் நிறைய விற்பனையாகின்றன.

மாணவா்கள் வருகை அதிகமாக இருப்பதன் மூலம் புத்தக விற்பனையும் நன்றாக உள்ளது. இதன் மூலம் வாசிப்பு பழக்கம் மேம்பட்டு வருவது தெரிய வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு புத்தக விற்பனை கூடுதலாக இருப்பதாக பபாசி செயலா் முருகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News