தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிலம்பாட்ட பட்டய படிப்புக்கு மாணவர் சேர்க்கை
- அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டடன.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விண்ணப்பங்கள் வந்து குவிந்தன.
தஞ்சாவூர்:
தமிழக அரசானது தமிழர்களின் மரபு கலையான சிலம்பாட்டத்தை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பலம் சேர்க்கும் வகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சிலம்பாட்டத்தில் பட்டய வகுப்புகளை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விண்ணப்பங்கள் வந்து குவிந்தன.
அதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு மற்றும் சேர்க்கை நேற்று தமிழ்ப் பல்கலைக்கழக மொழிப்புல அரங்கில் நடைபெற்றது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் தமிழக அரசின் விதிகளுக்குட்பட்டு இனவாரி சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்க்கை வழங்கப்பட்டது.
கலந்தாய்வில் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் பேசியதாவது:-
இந்த ஆண்டு பல்வேறு பட்டய படிப்புகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றுள் குறிப்பாக சிலம்பாட்டத்திற்கான பட்டய படிப்பிற்கு மட்டும் 200 இடங்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டது. சிலம்பாட்டக் கலைக்குப் புத்துயிர் ஊட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட சீரிய நடவடிக்கை எனில் அது 100 சதவீதம் உண்மையே. அடுத்த ஆண்டு முதல் சிலம்பாட்டத்தில் இளநிலை பட்டயம் மட்டுமல்லாது, முதுநிலை பட்டய படிப்பும், சிலம்பாட்டத்திற்கான முழுநேர பட்டய படிப்புகளும் கொண்டுவரப்படும் என்றார்.
பின்னர், சேர்க்கை பெற்றவர்களுக்கான உறுதிப்படிவத்தை துணைவேந்தர் திருவள்ளுவர் வழங்கினார். நிகழ்ச்சியில் இலக்கியத்துறையின் தலைவரும் கலைப்புல முதன்மையருமான இளையாப்பிள்ளை, மொழிப்புல முதன்மையர் கவிதா தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் இயக்குனர் திலகவதி, ஒருங்கிணைப்பாளர் சீமான் இளையராஜா, துணை ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.