போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கள்ளச்சாராய வியாபாரி தப்பியோட்டம்
- போலீசார் இதுவரை சுமார் 86 பேரை கைது செய்துள்ளனர்.
- கைது செய்யப்பட்ட 3 பேரும் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே கள்ளச்சாராயத்தை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் வியபாரம் செய்வோர் மற்றும் அதனை கடத்துபவர்களை உடனடியாககைது செய்ய வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் இதுவரை சுமார் 86 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் (வயது42) என்பவரை சங்கராபுரம் போலீசார் கள்ளச்சாராய வழக்கில் அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த தகவல் வெளியானதால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தப்பிஓடிய கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டனை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே சேஷசமுத்திரம் கிராமத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 40-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அக்கிராமத்தில் மட்டும் 4 பேர் இதுவரை உயிரிழந்தனர். இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சின்னதுரை, செந்தில், ராஜா ஆகிய 3 பேரும் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.