தமிழகத்தில் ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.72 ஆயிரமாக குறைந்தது
- தீபாவளி பண்டிகைக்கு பின் பழைய நிலைக்கும் திரும்பும்.
- அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கோவை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஞ்சு விலை வரலாறு காணாத வகையில் ஒரு கேண்டி (356 கிலோ) ஒரு லட்சம் ரூபாயை கடந்ததால், ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலிதொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
யூக வணிகம் மற்றும் 'எம்சிஎக்ஸ்' என்ற மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ் டிரேடிங் பட்டியலில் பஞ்சு இருப்பது தான் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது.
இதையடுத்து, ஜவுளித்தொழில் அமைப்பினர் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பஞ்சு விலை கணிசமாக குறைய தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா), இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு (சிட்டி), பருத்தி ஜவுளி ஏற்றுமதி கழக (டெக்ஸ்ப்ரோசில்) ஆகியோர் கூறியதாவது:-
ஜவுளித்தொழிலில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் பஞ்சு விலை ஏற்றம் ஒட்டுமொத்த இந்திய ஜவுளித்தொழிலை நெருக்கடிக்கு தள்ளியது. இது குறித்து மத்திய ஜவுளித்தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயலை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். யூக வணிகம்மட்டுமின்றி, எம்சிஎக்ஸ் பட்டியலில் பஞ்சை நீக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துக்கூறப்பட்டது.
உடனடியாக மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், பல ஆண்டுகள் தொழில் அனுபவம் கொண்ட சுரேஷ் கோட்டக் என்ற வல்லுநர் தலைமையில் சிறப்பு கமிட்டி அமைத்து பல கூட்டங்களை நடத்தினார். இந்த கமிட்டி சார்பில் எம்சிஎக்ஸ் டிரேடிங் பட்டியலில் பஞ்சை தற்காலிகமாக நீக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
யூக வணிகம் குறித்தும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் பஞ்சு விலை தற்போது ஒரு கேண்டி ரூ.72 ஆயிரமாக குறைந்துள்ளது.
மேலும், புதிய பஞ்சு சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால் எதிர் வரும் நாட்களில் பஞ்சு விலை மேலும் குறையும்.
சர்வதேச சந்தையில் தற்போது சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளின் பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.65 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. இந்திய பஞ்சுக்கும், இவற்றுக்கும் இடையே பெரிய அளவில் விலை வித்தியாசம் இல்லை.
எதிர்வரும் நாட்களில் இந்திய பஞ்சு விலை மேலும் குறையும் என்பதால் ஒட்டு மொத்த ஜவுளி சங்கிலித் தொடரிலுள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் தீபாவளி பண்டிகைக்கு பின் நெருக்கடியில் இருந்து மீண்டு பழைய நிலைக்கும் திரும்பும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.