பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
- ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது வழக்கம்.
- பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது வைகை அணை. இது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5மாவட்ட மக்களின் விவ சாயத்திற்கும், குடிநீருக்கும் பிரதானமாக விளங்கி வருகிறது. அணைக்கு நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, மூலவைகை ஆறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை காரணமாகவும், பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாகவும் நீர்வரத்து இருக்கும்.
கடந்த சில மாதமாக வைகை அணை, பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. வைகை அணையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லை. கடந்த கோடை காலத்தில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பெரியாறு, வைகை அணையில் இருந்து நீர் ஆவியாகி குறைய தொடங்கியது. இதனால் அணைகளுக்கு நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது வழக்கம். இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.05 அடியாக உள்ளது. அணைக்கு 61 கன அடிநீர் வருகிறது. 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2836 மி.கன அடியாக உள்ளது. வைகை அணியின் நீர்மட்டம் 48.31 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து இல்லை. இருப்பு 1786 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 302.98 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.32 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து இல்லை. திறப்பு 3 கனஅடியாக உள்ளது. இருப்பு 32 மி.கன அடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.