திருக்காலிமேடு ஏரி குப்பை கிடங்காக மாறியது
- ஏரியானது திருக்காலிமேடு முதல் சின்ன காஞ்சிபுரம் வரை நீண்டு பரவி காணப்படுகிறது.
- காஞ்சிபுரம் நகரத்தில் இருந்து லாரிகளில் ஏற்றிவரும் கழிவுநீரும் இந்த ஏரியில் தான் விடப்படுகிறது.
காஞ்சிபுரம் நகரில் உள்ள மிகப்பெரிய ஏரியாக திருக்காலிமேடு ஏரி விளங்குகிறது. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியானது திருக்காலிமேடு முதல் சின்ன காஞ்சிபுரம் வரை நீண்டு பரவி காணப்படுகிறது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருக்காலிமேடு, திருவீதி பள்ளம், நத்தம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்களை இந்த ஏரி விளைய வைத்தது. இதற்கி டையே காஞ்சிபுரம் வேகமாக நகரமாக வளர்ச்சி அடைந்ததால் விவசாயம் செய்வது நிறுத்தப்பட்டது. விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறின. அதன் பிறகு திருக்காலிமேடு ஏரி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இந்த ஏரியின் அனைத்து பக்கங்களிலும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் திருக்காலிமேடு ஏரி குப்பை மேடாக மாறி வருகிறது. இந்த குப்பைகள் அடிக்கடி எரிக்கப்படுவதால் அடர்ந்த புகைமூட்டம் மற்றும் காற்று மாசு ஏற்படுகிறது.
மேலும் காஞ்சிபுரம் நகரத்தில் இருந்து லாரிகளில் ஏற்றிவரும் கழிவுநீரும் இந்த ஏரியில் தான் விடப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஏரியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஏரியை சுற்றி வசிப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் இந்த ஏரிக்கு வரும் கால்வாய்கள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமி க்கப்பட்டுள்ளன. கால்வாய்கள் தூர்வாரப்படுவதும் இல்லை. இதனால் மழைநீர் இந்த காய்வாய்க்கு செல்ல முடியாமல் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மழை காலங்களில் ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்த ஏரி மாசுபட்டுள்ளதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த ஏரியில் கருவேல மரங்களும் அதிக அளவில் இருப்பதால் புதர் மண்டி காணப்படுகிறது. காஞ்சிபுரம் நகரத்தின் மையப்பகுதியில் இருந்தாலும், இந்த ஏரி முற்றிலும் பராமரிப்பு இன்றியே காணப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை விளைய வைத்த திருக்காலிமேடு ஏரி இப்போது குப்பை கிடங்காக மாறி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இந்த ஏரி மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.
காஞ்சிபுரம் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள நகரமாக உள்ளது. மேலும் இந்த ஏரியை அழிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஏரியில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
எனவே இந்த ஏரியில் லாரிகளில் கழிவுநீர் கொண்டு வந்து கொட்டுவதையும், குப்பைகளை கொட்டுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த ஏரியை தூர்வாரி நன்றாக பராமரிக்க வேண்டும். ஏரியை சுற்றிலும் பூங்கா அமைத்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். இந்த பூங்கா மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைப்பதுடன் இந்த ஏரியும் பாதுகாக்கப்படும். மேலும் காஞ்சிபுரம் நகரில் குடிநீர் பிரச்சனையும் தீரும். மழை காலங்களில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதப்பதும் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருக்காலிமேடு ஏரியை சீரமைத்து அதை சுற்றி பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது' என்றார்.