சிமென்ட் சாலைப் பணிக்காக சின்ன கடைத் தெருவில் போக்குவரத்துக்கு தடை
- பூதநாராயண பெருமாள் கோவில் முதல் காந்தி சிலை வரை அமைக்கப்படுகிறது
- முன் அறிவிப்பு இன்றி மூடப்பட்டதால் பாதசாரிகள் அவதி
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.
முதற்கட்டமாக மேல மாடவீதி பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் முதல் பெரிய தெரு வரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சாலை பணிகள் நடைபெற்று வருவதால் அந்த வழியாக சென்று வந்த பொதுமக்கள் தற்போது கீழ மாடவீதியான திருவூடல் தெரு, தேரடி தெரு, சின்ன கடைத்தெரு வழியாக பஸ் நிலையம் கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், வட்டார போக்குவரத்துஅலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலமாடவீதி சிமெண்ட் சாலை பணிகள் முடிவடையாத நிலையில் பெரிய தெரு சந்திப்பில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவில் முதல் காந்தி சிலை வரை உள்ள 110 மீட்டர் தூரம் கீழ மாட வீதியில் சாலை அமைக்கும் பணிக்காக நேற்று காலை முதல் சின்ன கடைத்தெரு சாலை அடைக்கப்பட்டது.
இதனால் எந்த வழியாக செல்வது என்று தெரியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலமாடவீதி சாலைப் பணிகள் தொடங்குவதற்கு முன்னர் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்படுவதாக கலெக்டர் முருகேஷ் அறிவித்தார்.
ஆனால் சின்ன கடைத்தெருவில் சாலை பணிக்காக மூடப்படும் என்ற எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் நேற்று காலை மூடப்பட்டது.
நகரின் முக்கிய போக்குவரத்து சாலையான சின்ன கடைத்தெரு சாலை திடீரென மூடப்பட்டதால் நகரில் பெரும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அடுத்த கட்ட கான்கிரீட் சாலை பணிகளை மேல மாட வீதியில் பணிகள் முடிந்த பிறகு கீழ மாட வீதியில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிரிவல பக்தர்கள் சின்ன கடைத்தெரு வழியாகத்தான் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.