உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே இளம்பெண் குத்திக்கொலை

Published On 2024-07-12 11:56 IST   |   Update On 2024-07-12 11:56:00 IST
  • கொலை சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:

சேலம் சுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (38), இவர் தனது தந்தையின் சகோதரி மகளான அயோத்தியாப்பட்டனம் ராம் நகரை சேர்ந்த இந்துமதி (27) என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7-ம் வகுப்பு படிக்கும் வேல்முருகன் (12) என்ற மகன் உள்ளார்.

திருமணம் முடிந்ததில் இருந்தே இந்து மதி அயோத்தியாப்பட்டணம் ராம்நகரில் தனக்கு தாய் கொடுத்த வீட்டில் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். 2 பேரும் கட்டிட கொத்து வேலைக்கு சென்று வந்தனர். இதற்கிடையே குடிப்பழக்கம் உள்ள சுரேசுக்கும், அவரது மனைவி இந்து மதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது . இதனால் கடந்த 8 மாதங்களாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக சுரேஷ் , இந்து மதியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்தார். நேற்றிரவு சுரேஷ் மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் இன்று காலையும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கத்தியால் இந்துமதியை வயிறு உள்பட பல பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

இதில் நிலைகுலைந்த இந்துமதி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அந்த பகுதியினர் அங்கு ஓடி வந்தனர். இதற்கிடையே அஙகு வந்த காரிப்பட்டி போலீசாரும், அந்த பகுதியினரும் சேர்ந்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுது புரண்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் சோகத்தில் மூழ்கியது.

கொலை செய்யப்பட்ட இந்து மதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு ள்ளது. இதையொட்டி அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர். போலீசாரிடம் அவர் கூறுகையில், மனைவியின் மீதான நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு ஆத்திரத்தில் இந்த கொலையை செய்ததாக கூறி உள்ளார். இது குறித்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News