உள்ளூர் செய்திகள் (District)

அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

Published On 2023-01-24 10:08 GMT   |   Update On 2023-01-24 10:08 GMT
  • திருவண்ணாமலை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
  • சமூக ஆர்வலர் கொலை வழக்கில் நடவடிக்கை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக ஆர்வலர் திருவண்ணாமலையில் மனித உரிமை மீறல் மற்றும் நில அபகரிப்பு வழக்குகளில் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் மற்றும் நில மாபியாக்களுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் ராஜ்மோகன்சந்திரா இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி செங்கம் சாலையில் அமைந்துள்ள சிங்கமுக தீர்த்தம் அருகில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன் (வயது 45) தரப்பினர் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து திருப்பதி பாலாஜி, அவரது தந்தை காசி என்ற வீராசாமி, அண்ணன் செல்வம், செல்வத்தின் மனைவி மீனாட்சி (41), திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் (32), தென்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (39), ஆணாய்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (42), விஜயராஜ் (41), வடஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்த சடையன் (40), போளூர் தாலுகா செங்குணம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (50) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு நடைபெற்று வந்த சமயத்தில் திருப்பதி பாலாஜியின் அண்ணன் செல்வமும், தந்தை காசி என்ற வீராசாமியும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) இருசன்பூங்குழலி தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன், மீனாட்சி, முருகன், சந்திரசேகர், அய்யப்பன், விஜயராஜ், சடையன், சுப்பிரமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். சமூக ஆர்வலர்கள் கொலை வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News