செஸ் போட்டி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு கோலம்
- 2000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை:
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதை யொட்டி திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய மைதானத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் வரையப்பட்ட மாபெரும் கோலத்தை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டார்.
மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் 44 - வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28.07.2022 அன்று நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்டங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சர்வதேச செஸ் போட்டி குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் வரையப்பட்ட மாபெரும் கோலத்தை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் நான்சி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சையத் சுலைமான், திருவண்ணாமலை நகரமன்றத்தலைவர் நிர்மலா கார்த்திவேல்மா றன், மகளிர் சுயஉதவிக்குழு உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.