உள்ளூர் செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ரூ.15 ஆயிரம் கொள்ளையடித்த போலி சாமியார்

Published On 2023-01-17 09:48 GMT   |   Update On 2023-01-17 09:48 GMT
  • அங்கு வந்த ஒரு சாமியார், கீர்த்தனாவிடம் உங்களுக்கு நேரம் சரியில்லை. சிலர் உங்கள் வீட்டில் மாந்திரீகம் செய்து வைத்துள்ளனர்.
  • அதனால் உங்கள் குடும்பத்தினருக்கு உடல் நல குறைவு, பண கஷ்டம் உட்பட ஆபத்து ஏற்படும் என்றார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகில் உள்ள பச்சுடையாம்பட்டி புதூரை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி கீர்த்தனா (வயது 23). சம்பவத்தன்று கீர்த்தனா வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு சாமியார், கீர்த்தனாவிடம் உங்களுக்கு நேரம் சரியில்லை. சிலர் உங்கள் வீட்டில் மாந்திரீகம் செய்து வைத்துள்ளனர். அதனால் உங்கள் குடும்பத்தினருக்கு உடல் நல குறைவு, பண கஷ்டம் உட்பட ஆபத்து ஏற்படும் என்றார். மேலும் மாந்திரீகம் செய்து, அதை நான் சரி செய்கிறேன் எனக்கூறி கையில் வைத்திருந்த விபூதியை கீர்த்தனாவின் முகத்தில் வீசினார்.

அத்துடன் அவர் போட்ட சாம்பிராணி புகை வீடு முழுவதும் பரவியது. இதை பயன்படுத்தி, கீர்த்தனா வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரத்தை திருடி கொண்டு, அந்த சாமியார் அங்கிருந்து சென்று விட்டார்.

கீர்த்தனா பீரோவை திறந்து பார்த்தபோது, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசில் கீர்த்தனா புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், வழக்கு பதிவு செய்து போலி சாமியாரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News