குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
- 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது
- குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை குரும்பாடி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.
குன்னூர்
நீலகிரியில் பெய்த கனமழையால் மரங்கள் விழுந்தன. இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளது. மேலும் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நீங்கி உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக நேற்று அதிகாலை 3 மணியளவில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை குரும்பாடி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செல்போன் சிக்னல் கிடைக்காத பகுதி என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்வாள் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் மரம் சாலையில் இருந்து அகற்றப்பட்டது. மலைப்பாதையில் மரம் விழுந்ததால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். மண் சரிவு இதேபோல் குன்னூர் பெட்போர்டு, கோத்தகிரி-வட்டப்பாறை சாலையில் நள்ளிரவில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அகற்றினர். மேலும் ஆங்காங்கே சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.
இதற்கிடையில் நேற்று மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஊட்டியில் கனமழை பெய்தது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு சென்றிருந்த, சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்கு சென்றனர். சிலர் குடைகளுடன் வலம் வந்தனர். ஊட்டியில் கடும் குளிர் நிலவியதால் பூங்காக்களை கண்டு ரசிக்க முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நீலகிரியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- குன்னூர்-68, பாலகொலா-69, கிண்ணக்கொரை-62, குந்தா-55, பர்லியார்-48, கோத்தகிரி-47, ஊட்டி-10 மழை பதிவானது. நீலகிரியில் சராசரியாக 23 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.