உள்ளூர் செய்திகள்

கணேசா ரவுண்டானா மேம்பால பணி ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும்

Published On 2023-05-03 08:43 GMT   |   Update On 2023-05-03 08:43 GMT
  • திருச்சி அருகே ரூ.50 கோடியில் நடைபெறும் மேம்பால பணி
  • தேசிய நெடுஞ்சாலைத்துறை உறுதி

திருச்சி,

திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு பின்னர் மத்திய அரசுக்கு சொந்தமான பெல் நிறுவனத்தின் எதிர்ப்புறம் கணேசா ரவுண்டானாவைச் சுற்றி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதில் பலர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். கூர்மையான வளைவுகளுடன் இருந்ததால் வாகனங்கள் அடிக்கடி கவிழ்ந்து விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது.இதையடுத்து பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.50 கோடியில் அந்தப் பகுதியில் புதிய மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கியது. மேலும் அந்த இடத்தில் அமைந்திருந்த ரவுண்டானாவை இடித்து அகற்றவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக பெல் நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்தப் பணிக்காக முழுமையாக வளர்ந்த சில மரங்களை சாலை ஓரத்தில் இருந்து முதல் வளாகத்தின் உள்பகுதிக்கு இடம் மாற்றம் செய்தனர்.இந்த மேம்பால திட்டப்பணிகள் கடந்த 2020-ம் ஆண்டில் தொடங்கியது. இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக திட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் கடந்தாண்டு தொடக்கத்தில் பணிகள் வேகம் எடுத்தன. தற்போது பாலத்தின் இருபுறமும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 90 சதவீத மேம்பால பணிகள் நிறைவடைந்துள்ளன.இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த மாத இறுதிக்குள் மேம்பால பணிகளை முடிக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். இந்த மாதத்தில் இல்லாவிட்டாலும் ஜூன் மாத நடுவில் பணிகள் முடிவடையும். இந்த நெடுஞ்சாலை ஒரு பெரிய அளவிலான போக்குவரத்தை வழங்குகிறது என்றார்.பெல் தொழில்துறை வளாகம் மற்றும் டவுன்ஷிப் அமைந்துள்ளதால் அதிக எண்ணிக்கையிலான பெல் ஊழியர்கள் தங்கள் பயணத்திற்காக ஒவ்வொரு நாளும் நெடுஞ்சாலையை கடக்க வேண்டியுள்ளது. புதிதாக அமைக்கப்படும் இந்த மேம்பாலம் பெல் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் விரைவாக கடந்து செல்லவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News