வேலூர் கோட்டையில் காதல் ஜோடிகளுக்கு தடை
- வேலூர் கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடிகள் அதிகளவில் வருவார்கள்.
- கோட்டைக்கு வரும் காதல் ஜோடிகள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
வேலூர்:
உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா மலர்களை பரிமாறிக் கொண்டும், பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டும் காதலர் தினத்தை கொண்டாடுகின்றனர்.
வேலூர் கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடிகள் அதிகளவில் வருவார்கள்.
தனிமையில் இருந்து காதல் ஜோடிகள் அத்துமீறவும், மேலும் சமூக விரோத கும்பல் காதல் ஜோடிகளிடம் தவறாக நடந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
இதனையடுத்து வேலூர் கோட்டைக்குள் நாளை காதல் ஜோடிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வேலூர் கோட்டை வளாகம், கொத்தளம், பூங்கா பகுதிகளில் காதல் ஜோடிகளுக்கு நாளை அனுமதி இல்லை.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-
வேலூர் கோட்டையில் நாளை காதலர் தினத்தையொட்டி காதல் ஜோடிகள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. கோட்டைக்கு வரும் காதல் ஜோடிகள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
கோட்டை கோவில் மற்றும் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் செல்லலாம் அவர்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது.
இது தவிர வேலூரில் மற்ற இடங்களில் தனிமையில் அமர்ந்து பேசும் காதல் ஜோடிகளிடம் யாராவது தகராறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.