விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் வேன்.
பஸ் மீது ஆம்புலன்ஸ் வேன் மோதல்; 6 பேர் படுகாயம்
- பஸ் மீது ஆம்புலன்ஸ் வேன் மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
- மழை பெய்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிராம் மில் அருகே ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது தனியார் ஆம்புலன்ஸ் மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நோயாளியை ஏற்றிக்கொண்டு சிவகிரியில் இருந்து சென்றது.
அரசு பஸ்சை ஆம்புலன்சு வேன் முந்த முயன்றபோது எதிரே ஜே.சி.பி. வாகனம் வந்தது. அதன் மேல் மோதாமல் இருப்பதற்காக இடது புறமாக ஆம்புலன்சை டிரைவர் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னே சென்ற அரசு பஸ் மீது பின்புறமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர், ஆம்புலன்சில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திக் தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்காக சென்ற நபரை மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மதுரைக்கு அனுப்பி வைத்தனர் .
இந்த விபத்தில் ஆம்பு லன்சில் அமர்ந்திருந்தவர் விபத்தில் சிக்கி மீட்க முடியாத நிலையில் இருந்தார். அவரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சம்பத் (வயது 26), ராம்குமார் (29), சிவகுமாரி (49) ஆகிய 3 பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த பஸ் பயணி பாண்டிச்சேரியைச் சேர்ந்த குணாலும் (27) மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திக் (29), முகமது பாசிக் (25) இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்ததால்இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.