கோவையில் குப்பைகளாக காட்சியளிக்கும் நீர்நிலைகள்- நோய் பரவும் அபாயம்
- நீரோடையில் கிடக்கும் குப்பைகள் மூலம் நோய் பரவும் அபாயம்
- குப்பை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்க கோரிக்கை
கோவை,
கோவை மாநகரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே நொய்யல் ஆறு மூலம் ஆங்காங்கே நீரோடைகள் ஓடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் குடியிருப்புவாசிகள் ஒரு சிலர் இந்த நீரோடைகளில், குப்பை கழிவுகளை கொட்டுவதால், நீரோட்டம் தடைபடுவது மட்டுமின்றி, நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் நோய் பரவுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நொய்யல் ஆறு என்பது கோவைக்கு கிடைத்த வரப்பிரசாதம். இத்தகைய நொய்யல் ஆறு கோவை மாநகரம் முழுவதும் ஆங்காங்கே நீர் ஓடைகள் மூலம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பொதுமக்கள் செய்யும் தவறுகளால் இந்த நொய்யல் ஆறு மாசடைந்து காணப்படுகிறது.நகர வீதிகளில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைத்திருந்தாலும் குப்பை தொட்டியில் குப்பைைய போடாமல் கீழே போடுவார்கள்.
தற்போது குப்பைகளை நீரோடைகளில் கொட்ட தொடங்கி உள்ளனர்.
நீரோடை என்பதால் தண்ணீரில் அடித்து சென்று விடும் என நினைத்து குப்பைகளை கொட்டுகின்றனர். ஆனால் மேலும், மேலும் கொட்டப்படும் குப்பைகளால் அங்கு நீரோடை இருக்கிறதா என்ற கேள்வியே எல்லோருக்கும் எழும்.
அந்தளவுக்கு அங்கு குப்பைகளை தேக்கி நீர் செல்ல முடியாத அளவுக்கு மாறிவிடுகிறது.
மேலும் குப்பைகள் மக்கி அதில் இருந்து ஒரு சில பாக்டீரியாக்களும் வெளியாகின்றன. இவை துர்நாற்றம் ஏற்படுத்துவதோடும் பொதுமக்களும் சில பல நோய்களையும் உருவாக்கி வருகிறது.
குறிப்பாக கோவையில் மதுக்கரை மார்க்கெட் அருகே ஒரு நீரோடை செல்கிறது. அந்த நீரோடையில் அங்கு குடியிருப்பவர்கள் குப்பைகளை கொட்ட ஆரம்பித்தனர். தற்போது அங்கு நீரோட்டம் தடைபட்டு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.
இவர்கள் மட்டுமின்றி மற்ற பகுதிகளை சேர்ந்தவர்களும் இரவு நேரங்களில் வந்து குப்பையை கொட்டி செல்கிறார்கள். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது.
3 சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதியாக இருக்கும் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது.மேலும் நீர் ஓடையில் குவிக்கப்பட்டி ருக்கும் குப்பைகள் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி நோயையும் பரப்பி வருகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இதை ஆய்வு செய்து குப்பைகளை அகற்ற வேண்டும்.
மேலும் குப்பைகளை கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும். மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.