உள்ளூர் செய்திகள்

அரசு திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைப்பதில்லை-அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் குற்றசாட்டு

Published On 2022-09-02 15:28 IST   |   Update On 2022-09-02 15:28:00 IST
  • கோவை மாவட்டத்தில் தலைகீழாக அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் தி.மு.கவால் நடைபெறுகிறது.
  • அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அரசு திட்டங்களை தொடக்கி வைக்கும் விழாவிற்கு எங்களை அழைக்க வேண்டும்.

கோவை:

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி நடத்தப்பட்ட அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் தாமோதரன், கந்தசாமி மாநகர் மாவட்ட அவை தலைவர் சிங்கை முத்து, பகுதி செயலாளர் காலனி ராஜ்குமார், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ தலைமையில் எம்எல்ஏக்கள் அமுல் கந்தசாமி, கந்தசாமி, தாமோதரன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் சமீரனிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது

கோவை மாவட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் உள்ளனர். அரசு திட்டங்களுக்கு பூஜை போடும் நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைப்பதில்லை.

இதே போல பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு எங்களை அழைத்தாலும் நாங்கள் செல்வதற்கு முன்பு தி.மு.க நிர்வாகிகளை வைத்து சைக்கிளை கொடுத்து விடுகிறார்கள்.

இதனால் எங்களை அழைத்து அவமானப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது . கோவை மாவட்டத்தில் தலைகீழாக அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் தி.மு.கவால் நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம் அதற்கு சாதகமாக உள்ளது.

பல பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பாக தங்களிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். உதாரணமாக அவிநாசி ரோட்டில் உள்ள பால தூண்களில் தி.மு.க விளம்பரம் மட்டுமே உள்ளது.

இதனை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மருதமலை கோவில் மண்டப பூஜை போடும் நிகழ்ச்சிக்கு தொகுதி எம்எல்ஏ.வான என்னை அழைக்கவில்லை. ஆனால் தி.மு.க பகுதி செயலாளர் வைத்து பூமி பூஜை போட்டுள்ளனர்.

இப்படி இருந்தால் மக்கள் எங்களை எப்படி மதிப்பார்கள். எனவே அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அரசு திட்டங்களை தொடக்கி வைக்கும் விழாவிற்கு எங்களை அழைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News