கொரோனா உதவித்தொகை கோரி கலெக்டரிடம் மனு
- கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய எங்களுக்கு கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
- ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கொசுஒழிப்பு களப்பணியாளர் நலச்சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கொசுஒழிப்பு களப்பணியாளர் நலச்சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அவர்கள் தெரிவிக்கையில்,
தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மருத்துவத்துறைக்கான கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை 2021-ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்பு களப்பணியாளர்களும், நாங்களும் கொரோனா காலகட்டத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வகதொழில்நுட்ப வல்லுநர்களுடன் சென்று கொேரானா மாதிரிகளை சேகரிப்பது, வீடுவீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என கண்டு அறிவது, வீடுகளுக்கு சென்று கிருமிநாசினி தெளிப்பது, ஆக்சிஜன் அளவு, இதயதுடிப்பு அளவு, வெப்பத்தின் அளவு சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டோம்.
கொரோனா நோயாளிகள் கல்லூரியில் செயல்பட்ட முகாம்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் அவர்கள் இறக்க நேரிட்டால் அடக்கம் செய்யும் பணியிலும் நாங்கள் ஈடுபட்டோம். மாவட்ட எல்லையில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பது, நோயாளிகளை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டோம்.
உயிரை பணயம் வைத்து பணியாற்றிய எங்களுக்கு கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவேண்டும் என மாநில செயலாளர் தயாளன் தெரிவித்தார்.