உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் சாரல் மழையுடன் பனிமூட்டம்- சீதோஷ்ணநிலை மாற்றத்தால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2025-03-01 10:58 IST   |   Update On 2025-03-01 10:58:00 IST
  • கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர், பனிப்பொழிவு நிலவியது.
  • கோடை காலம் தொடங்கும் முன்பே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் அனல்காற்று வீசிவருகிறது.

ஏற்காடு:

சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்தது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதன் காரணமாக ஏற்காடு சுற்றுலா தலம் பசுமையாக மாறியது.

ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

குறிப்பாக தொடர் விடுமுறை நாட்கள், வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை இந்தாண்டு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர், பனிப்பொழிவு நிலவியது.


தற்போது கோடை காலம் தொடங்கும் முன்பே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் அனல்காற்று வீசிவருகிறது. ஆனாலும் ஏற்காட்டில் குளிர்ந்த காற்று வீசிவருவதால் அதை அனுபவிக்க விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்து உள்ளனர். மேலும் ஏராளமானபேர் நேற்று மாலையே ஏற்காட்டிற்கு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் ஏற்காட்டில் திடீரென சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு சாரல்ம ழை பெய்தது. இன்று காலையும் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது. ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் சாரல்மழையில் நனைந்த ப்படி பனிமூட்டத்தை ரசித்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து குளிர்ந்த காற்றும் வீசிவருகிறது. சமவெளி பகுதிகளில் அனல்காற்று வீசிவரும் நிலையில் ஏற்காட்டில் நிலவிவரும் இந்த சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகிறார்கள். பனிமூட்டம் காரணமாக ஏற்காட்டுற்கு வந்து சென்ற அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி வந்து சென்றது.

Tags:    

Similar News