உள்ளூர் செய்திகள்
தென்காசி அருகே சிறுவர்களுக்கு போதை மாத்திரை வழங்கிய வாலிபர் கைது
- மயக்கம் அடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
- சிறுவர்களுக்கு மர்மநபர் ஒருவர் போதை மாத்திரை வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.
தென்காசி:
தென்காசியில் வாலிபன் பொத்தை பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் வாந்தி ஏற்பட்டு திடீர் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அங்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் அந்த 4 சிறுவர்களுக்கும் மர்மநபர் ஒருவர் போதை மாத்திரை வழங்கியதும், அதனை சிறுவர்கள் தெரியாமல் சாப்பிட்டதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை கொடுத்தது எல்.ஆர்.எஸ். பாளையம் பகுதியை சேர்ந்த காசிராஜன் (வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.