மதுகுடித்த போது ஆம்லேட் அதிகமாக சாப்பிட்டதால் வாலிபர் கொலை - உறவினர் கைது
- ஆம்லெட்டை அதிகமாக சாப்பிட்ட செல்லப்பனை முருகன் கண்டித்து வாக்குவாதம் செய்தார்.
- இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் உய்யாலி குப்பம் இருளர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (30). இவரது நெருங்கிய உறவினர் முருகன் (32).
இருவரும் நேற்று இரவு புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கார் ஷோரூம் ஒன்றின் அருகே அமர்ந்து மது குடித்தனர். அப்போது வாங்கி வந்திருந்த ஆம்லெட்டை செல்லப்பன் அதிகமாக சாப்பிட்டதாகத் தெரிகிறது. இதனை முருகன் கண்டித்து வாக்குவாதம் செய்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அருகில் கிடந்த விறகு கட்டையால் செல்லப்பனின் தலையில் தாக்கினார். பலத்த காயமடைந்த செல்லப்பன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
தகவலறிந்ததும் கல்பாக்கம் போலீசார் விரைந்து வந்து செல்லப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக அதே பகுதியில் பதுங்கி இருந்த முருகனை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் ஆம்லேட்டுக்காக வாலிபர் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது