செய்திகள்

பெரம்பூர் வேட்பாளரிடம் ரூ.1.76 லட்சம் கோடி பணம்- அதிகாரிகளை மலைக்க வைத்த பிரமாண பத்திரம்

Published On 2019-04-04 15:46 IST   |   Update On 2019-04-04 15:46:00 IST
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜ், தன்னிடம் ரூ.1.76 லட்சம் கோடி பணம் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் கூறியிருக்கிறார். #TNByPoll
சென்னை:

பெரம்பூர் சட்டசபை இடைத்தேர்தலில் ஜெபமணி ஜனதா கட்சி சார்பில் மயிலாப்பூரை சேர்ந்த மோகன்ராஜ் போட்டியிடுகிறார்.

இவர் சுதந்திர போராட்ட தியாகியும், ஜனதா கட்சியின் முக்கிய தலைவருமாக இருந்தவருமான நெல்லை ஜெபமணியின் மகன் ஆவார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு தற்போது 67 வயதாகிறது. தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி இவர் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.

ஏற்கனவே இவர் விருதுநகரில் வைகோவை எதிர்த்தும், சிவகங்கையில் ப.சிதம்பரத்தை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியிலும் மற்றும் மயிலாப்பூர் தொகுதியிலும் போட்டியிட்டார். இப்போது பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தனது சொத்து கணக்கை காட்ட வேண்டும் என்று விதிகள் உள்ளன. அதன்படி தனது சொத்து மதிப்பை மோகன் ராஜ் குறிப்பிட்டு உள்ளார். அந்த சொத்து கணக்கை பார்த்து தேர்தல் அதிகாரிகளே ஒருகனம் அதிர்ச்சியாகி விட்டனர்.

அவர் தனக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பணம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளன. அந்த வகையில் பார்த்தால் மோகன்ராஜ்தான் இந்தியாவின் 2-வது பணக்காரர் ஆவார்.

மோகன்ராஜின் உண்மையான சொத்துக்களின் மதிப்பு சில லட்சம் ரூபாய் மட்டும்தான். ஆனாலும் தேர்தல் ஆவண விதிமுறைகள் எந்த அளவுக்கு கேலிக்கூத்தாக இருக்கிறது என்பதை வெளிக்காட்ட இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


அது மட்டும் அல்ல, உலக வங்கியில் தனக்கு ரூ.4 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அதாவது தமிழ்நாடு அரசுக்கு சுமார் ரூ.4 லட்சம் கோடி கடன் உள்ளது. அதை தனது கடனாக குறிப்பிட்டு இருக்கிறார்.

இப்படி அவர் வேட்பு மனுவில் குறிப்பிட்டு இருக்கும் ஒவ்வொரு வி‌ஷயங்களும் வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருக்கிறது.

அவர் இப்போது மட்டும் அல்ல, இதற்கு முந்தைய தேர்தல்களிலும் இப்படித்தான் ஏறுக்குமாறாக சொத்துக்கணக்கை கூறி இருந்தார்.

ஏன் இப்படி சொத்துக் கணக்கை கூறி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவில் உண்மையான தகவலை மட்டும்தான் குறிப்பிட வேண்டும் என்பது தேர்தல் கமி‌ஷன் விதி. அதில் தவறான கணக்கை கூறிஇருந்தால் அந்த வேட்பு மனுவை தள்ளுபடி செய்யலாம்.

ஆனால் வேட்பு மனுவில் எத்தனை தவறான தகவல்களை கூறி இருந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் தேர்தல் அதிகாரிகள் அந்த மனுவை ஏற்றுக்கொள்கிறார்கள். தேர்தல் பணியின் லட்சணம் இப்படித்தான் இருக்கிறது என்பதை மக்களுக்கு காட்டுவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் சொத்து மதிப்பை இப்படி எக்குதப்பாக குறிப்பிட்டேன்.

எனது வேட்பு மனுவை பார்த்த தேர்தல் அதிகாரி என்னை மேலும், கீழும் பார்த்தார். ஏன் இப்படி குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார். எனது தகவலில் தவறுஇருந்தால் மனுவை தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறினேன். ஆனால் இது தவறான தகவல் என தெரிந்தும் தேர்தல் அதிகாரி எனது மனுவை தள்ளுபடி செய்யவில்லை.

இந்த காரணத்திற்காக எனது மனுவை தள்ளுபடி செய்தால் இந்தியாவில் அனைத்து வேட்பாளர்கள் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பிரதமர் மோடி மற்றும் சோனியா மனுவை கூட ஏற்க முடியாது.

அவர்கள் எல்லாம் எத்தனையோ கார்களை வைத்து இருக்கிறார்கள். ஆனால் கார் இல்லை என்று பொய் சொல்கிறார்கள். பல வேட்பாளர்களின் வேலைக்காரர் கூட கார் வைத்துள்ளார். ஆனால் வேட்பாளர் தனக்கு கார் இல்லை என்கிறார். இப்படி வேட்பு மனுவில் எல்லாமே பொய் தகவல்கள் இருந்தும் தேர்தல் கமி‌ஷன் அதை தள்ளுபடி செய்வது இல்லை.

நான் முன்பு இன்ஸ்பெக்டராக பணியாற்றினேன். நேர்மையாக பணி செய்த ஒரே காரணத்துக்காக என்னை பல ஊர்களுக்கும் மாற்றி பழி வாங்கினார்கள். அடுத்து டி.எஸ்.பியாக பதவி உயர்வு கிடைக்க இருந்தது. பழி வாங்கல் காரணமாக 13 ஆண்டு மேலும் சர்வீஸ் இருந்த நிலையில் 45 வயதிலேயே இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். 1998-ம் ஆண்டில் இருந்தே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன்.

இவ்வாறு மோகன்ராஜ் கூறினார். #TNByPoll #LoksabhaElections2019

Similar News