
- நமது உடலை அக்கறையுடன் பராமரிக்காவிடில் உறுப்புகள் பழுதாகி விடும்.
- நம்மால் முடிந்தவரை,நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
''மூலதனம்'' என்பது முதல்..
'முதல்'' என்பது பொருள்.
அந்தப் பொருளைத் தான் உடல் என்றனர்.
நமது உடலை அக்கறையுடன் பராமரிக்காவிடில் உறுப்புகள் பழுதாகி விடும். அல்லது உடல் தன் இயக்கத்தையே நிறுத்தி விடக் கூடும்.எனவே, நம்மால் முடிந்தவரை,நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..
பசித்த பின் புசிப்பது, ஆரோக்கியத்திற்கு ஆகாதவற்றைப் புறந்தள்ளுவது, உடல் உழைப்பு, ஆழ்ந்த உறக்கம், பரபரப்பற்ற அமைதியான உள்ளம் ஆகியவை சீரான உடல் இயக்கத்திற்கு முக்கியம்.
ஒருநாள் காலை நேரம் சிந்தனையாளர் டால்ஸ்டாய் நடந்து போய்க் கொண்டு இருந்தார்.
எதிரே ஒரு இளைஞன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தான். உடனே அவர் சென்று அவனைத் தடுத்து நிறுத்தினார்.
"எதற்காக இப்படிச் செய்கிறாய்?'' என்று கேட்டார் டால்ஸ்டாய்.
"ஐயா... நான் ஏதாவது தொழில் செய்து பிழைக்கத் தான் ஆசைப்படுகிறேன் ஆனால் அதற்கு மூலதனமாக என்னிடம் எதுவும் இல்லையே? வறுமை வாட்டுகிறது
தற்கொலை செய்து கொள்வது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை'' என்றான் அந்த இளைஞன்.
உடனே டால்ஸ்டாய்,
"நான் உனக்கு நூறு ரூபிள் தருகிறேன். அதற்குப் பதிலாக உனது ஒரு விரலை மட்டும் தருவாயா?'' என்றார் டால்ஸ்டாய்.
"ஒரு விரலா! அது முடியாது.''
"சரி, நூறு ரூபிள் தருகிறேன்... ஒரு கண்ணைத் தருவாயா?''
"ஒரு கண்ணா! இதுவும் முடியாது.''
"அப்படியென்றால் ஆயிரம் ரூபிள் தருகிறேன். இரண்டு கால்களில் ஒன்றை மட்டுமாவது கொடு.''
இளைஞன் கோபத்தோடு சட்டென்று சொன்னான்,"எதுவும் என்னால் கொடுக்க முடியாது. உங்களுக்கு என்ன பைத்தியமா?'' என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தான்.
அப்போது டால்ஸ்டாய் சிரித்துக் கொண்டே, "தம்பி... இங்கே வா. உன்னிடம் விலை மதிக்க முடியாத உடல் உறுப்புகள் இருக்கின்றன என்பதை இப்போது நீ புரிந்து கொண்டாயா?இதுதான் மூலதனம். இதை நன்றாகப் பராமரித்துப் பயன்படுத்து. நீ விரைவிலேயே செல்வந்தனாவாய்'' என்றார்.
அப்பொழுது தான் அந்த இளைஞன் தனது உடம்பின் மதிப்பை உணர்ந்தான்.
ஆம்.,நண்பர்களே..ஆரோக்கியம் என்பது விலை கொடுத்து வாங்க முடியாதது. அதனை இழந்த பின் தான் பலரும் அதன் அருமையை உணர்கிறார்கள்.
-ஜெய் சரவணன்