ஐதராபாத் மெட்ரோ ஒத்துழைப்பால் 13 கி.மீ. தொலைவை வெறும் 13 நிமிடத்தில் கடந்த இதயம்...
- மருத்துவ பணியாளர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் பெரும் உதவி புரிந்துள்ளது.
- அனைத்தும் மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக உடல் உறுப்பு தானம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் பலர் மறுவாழ்வு பெறுகின்றனர். உடல் உறுப்பு தானம் செய்தாலும் அதனை சரியான நேரத்தில் கொண்டு சென்று பொருத்துவதில் மருத்துவர்களின் பணி போற்றுதலுக்குரியது.
அதுபோன்ற ஒரு நிகழ்வு தான் ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. 13.கி.மீ தொலைவை 13 நிமிடங்களில் சென்று இதயத்தை உரிய நேரத்தில் பொருத்தி வாழ்வு அளித்துள்ளனர் மருத்துவ பணியாளர்கள். அவர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் பெரும் உதவி புரிந்துள்ளது.
எல்.பி. நகரின் காமினேனி மருத்துவமனையில் பெறப்பட்ட இதயத்தை லக்டிகாபுலில் உள்ள க்ளெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். போக்குவரத்து மிகுந்த நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் உதவி உள்ளது.
13.கி.மீ. தொலைவை 13 நிமிடங்களில் சென்று அடைவதற்கு ஐதராபாத் மெட்ரோ ரெயில் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு இடையேயான கவனமான திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு மூலம் சாத்தியமானது. இவை அனைத்தும் மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இச்சேவையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.