இந்தியா

ஆபரேசனுக்கு பிறகு 18 பேரின் கண் பார்வை இழப்பு: ராஜஸ்தான் அரசு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

Published On 2023-07-12 19:28 IST   |   Update On 2023-07-12 19:28:00 IST
  • நோயாளிகள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகும் இழந்த பார்வையை பெற முடியவில்லை.
  • மருத்துவர்கள் மீது எந்த தவறும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் பர்ஸதி லால் மீனா தெரிவித்தார்.

ராஜஸ்தானின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ஸவாய் மான் சிங் மருத்துவமனையில், கண் புரைக்கான அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 பேர் ஒரு கண்ணில் பார்வையை இழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ராஜஸ்தான் அரசின், சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றிருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட ஒருவர் இதுபற்றி கூறியதாவது:

எனக்கு ஜூன் 23 அன்று ஆபரேஷன் செய்யப்பட்டது. ஜூலை 5 வரை எனக்கு பார்வை இருந்தது; எல்லாம் தெரிந்தது. ஆனால் ஜூலை 6 அல்லது 7 தேதியளவில் கண் பார்வை போய்விட்டது. அதன் பிறகு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் பார்வை திரும்பவில்லை. கண்பார்வை இழப்புக்கு தொற்று நோய் தான் காரணம் என்றும் நோய்த்தொற்றை குணப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறினார்கள்.

இவ்வாறு அந்த நோயாளி கூறினார்.

கடுமையான கண் வலி இருப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்தபோது, மருத்துவமனை அதிகாரிகள் நோயாளிகளை மீண்டும் மருத்துவமனையில் சேருமாறு கேட்டுக்கொண்டனர். நோயாளிகள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகும் இழந்த பார்வையை பெற முடியவில்லை. அவர்களில் சிலர் இரண்டு முறைக்கு மேல் அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்கள் மீது எந்த தவறும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் பர்ஸதி லால் மீனா தெரிவித்தார்.

மருத்துவமனையின் கண் மருத்துவ பிரிவை சேர்ந்தவர்கள், தங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை என்று கூறியதுடன், நோயாளிகளிடமிருந்து புகார்கள் வந்த பிறகு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.

ஆனால், மருத்துவர்களும் மருத்துவமனை நிர்வாகமும் கவனக்குறைவாக இருந்ததாக பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News