ரேவந்த் ரெட்டி சகோதரருக்கு "கான்வாய்": பேண்டு வாத்தியங்களுடன் அணிவகுப்பு- பாஜக, பிஆர்எஸ் விமர்சனம்
- பள்ளி விழாவுக்கு முதல்வர் சகோதரரர் போலீஸ் பாதுகாப்பு வாகனங்களுடன் சென்றார்.
- பள்ளி மாணவர்கள் பேண்டு வாத்தியங்களுடன் அணிவகுப்பு நடத்தி வரவேற்றனர்.
தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி இருந்து வருகிறார். இவரது சகோதரர் அனுமுலா திருப்பதி ரெட்டி. இவர் ஒரு பள்ளிக்கூட விழாவிற்குச் சென்றார். திருப்பதி ரெட்டி எந்த பதவியிலும் இல்லை.
இருந்த போதிலும் போலீசார் பாதுகாப்பு வாகனங்களுடன் (Convoy) பள்ளிக்கு சென்றார். அங்கு மாணவர்கள் பேண்டு வாத்தியங்களுடன் வரவேற்றதுடன், அணிவகுப்பு நடைபெற்றது.
அரசு அதிகாரத்தில் இல்லாமல், முதலமைச்சர் சகோதரர் என்பதற்காக இவ்வாறு செய்யலாமா? என தெலுங்கானா எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர்.
பிஆர்எஸ் கட்சி செயல் தலைவர் கே.டி. ராம ராவ், தெலுங்கானாவில் ஒரேயொரு முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அரைடஜன் முதல்வர்களை பெற்றுள்ளது என கிண்டல் செய்ததுடன் "விகரபாத் முதலமைச்சர் திருப்பதி ரெட்டிக்கு என்னுடைய வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ரெட்டி எம்.பி., எம்.எல்.ஏ. அல்லது மாநகராட்சி உறுப்பினராக கூட இல்லாத நிலையில் போலீஸ் பாதுகாப்பு வாகனம் போன்ற சலுகைகளை அனுபவிக்கிறார் என பாஜக தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் காங்கிரஸ் "ஒரு பள்ளி நிர்வாகம் அதன் நிகழ்வுகளுக்கு யாரை அழைக்க விரும்புகிறது, அந்த நபரை எவ்வாறு வரவேற்க விரும்புகிறது என்பது அந்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
மேலும், சந்திரசேகர ராவ் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை விதிகள் மற்றும் நெறிமுறைகளை மீறியுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளது.