இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 11 நாட்களில் 10 லட்சம் பக்தர்கள் தரிசனம்

Published On 2025-01-11 04:15 IST   |   Update On 2025-01-11 04:15:00 IST
  • 14-ந்தேதி 40 ஆயிரமாகவும், 15-ந்தேதி உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.
  • மண்டல சீசனில் மட்டும் 41 நாட்களில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர்.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் 16-ந்தேதி (கார்த்திகை 1) முதல் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 26-ந்தேதி மண்டல சீசன் நிறைவு பெற்றது. மண்டல சீசனில் மட்டும் 41 நாட்களில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர்.

இந்த நிலையில் மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலையில் தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த 11 நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இதற்கிடையில், மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க, ஜனவரி 13-ந்தேதி வரை ஆன்-லைன் முன்பதிவு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், 14-ந்தேதி 40 ஆயிரமாகவும், 15-ந்தேதி உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும், பம்பையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பிப்ரவரி 9-ந்தேதி முதல் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளன. மகரவிளக்கு பூஜைக்கு மறுநாளான 15ம் தேதி நெரிசலை தவிர்க்க, அன்று மாலை 3 மணியில் இருந்து, 5 மணிக்குள் தரிசிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள், மாலை 6 மணிக்கு பிறகு வரவேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:    

Similar News