செய்திகள்

திருப்பதி கோவிலில் விரைவில் பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி பொங்கல், உப்புமா வழங்க முடிவு

Published On 2016-05-05 06:00 GMT   |   Update On 2016-05-05 06:00 GMT
திருப்பதி கோவிலில் விரைவில் பக்தர்களுக்கு காலை சிற்றுண்டியாக பொங்கல், உப்புமா வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
நகரி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதற்காகவே நித்திய அன்னதான அறக்கட்டளை தொடங்கப்பட்டு அதில் கிடைக்கும் நன்கொடைகள் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் அன்னபிரசாத கூடமும் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தினமும் காலை 11 மணி முதல் இரவு 10 மணிக்கு மேல் வரை பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

அன்னதான அறக்கட்டளை வங்கி கணக்கில் ரூ.700 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. இதில் இருந்து கிடைக்கும் வட்டியை வைத்தே அன்னதானத்துக்கு செலவு செய்யப்படுகிறது.

அதோடு பக்தர்கள் நன்கொடையும் இந்த திட்டத்துக்கே அதிகம் கிடைக்கிறது.

எனவே பக்தர்களின் வசதிக்காக அவர்களுக்கு காலை சிற்றுண்டியும் இலவசமாக வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரை பக்தர்களுக்கு பொங்கல், உப்புமா, சட்னி ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

11 மணிக்கு மேல் சாப்பாடு பரிமாறப்படும். இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அரசு உதவுவது போல் ஏழை இந்துக்கள் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு உதவ அரசு முன்வந்து உள்ளது.

மாவட்டத்துக்கு ஆயிரம் பேர் வீதம் ஆந்திராவில் உள்ள 13 மாவட்டத்திலும் 13 ஆயிரம் பேர் தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்த திட்டத்துக்கு ‘திவ்ய தரிசன திட்டம்‘ என்ற பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த தகவலை ஆந்திர அறநிலையத்துறை மந்திரி மாணிக்கலாராவ் தெரிவித்தார்.

இந்த திட்டத்துக்கான செலவை அரசு ஏற்பதா? அல்லது தேவஸ்தானம் ஏற்பதா? என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. அது முடிவான பிறகு இந்த திட்டம் அமுல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

Similar News