செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது

Published On 2016-07-23 15:49 IST   |   Update On 2016-07-23 15:49:00 IST
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குவாலியர்:

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள சுல்தான்பூர் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை நேற்று தவறி விழுந்தது. குழந்தையை மீட்கும் பணியில் உள்ளூர் போலீசார், மாவட்ட அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர்.



ஆழ்துளை கிணற்றில் 25 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதன் அருகிலேயே பக்கவாட்டில் மற்றொரு சுரங்கமும் தோண்டப்பட்டு குழந்தையை இன்று காலையில் மீட்டனர். குழந்தை மயங்கிய நிலையில் காணப்பட்டதால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறினார். இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.



குழந்தை உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிவதற்காக பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை சிக்கியிருந்த ஆழ்துளை கிணற்றில் பாம்பு ஒன்று இருந்ததும் கேமரா மூலம் கண்டறியப்பட்டது. ஆனால், குழந்தையை விட்டு சற்று ஆழத்தில் அது இருந்ததால் குழந்தையை கடித்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

Similar News