செய்திகள்

கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? - டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டுக்கு விரைந்தார் ப.சிதம்பரம்

Published On 2018-03-01 14:15 IST   |   Update On 2018-03-02 09:46:00 IST
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை ஜாமீனில் எடுப்பதற்காக டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு ப.சிதம்பரம் சென்றார்.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை டெல்லி அழைத்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், டெல்லி பாட்டியாலா அவுஸ் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது.



இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து முதலீடு பெற்றது பற்றி ஏராளமான கேள்விகள் கேட்டனர்.

அதுபோல ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் பற்றியும் அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினார்கள். விடிய, விடிய இந்த விசாரணை நடந்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு கார்த்தி சிதம்பரம் நேரடியாக பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. அதிகாரிகளிடம்  அவர் மிரட்டலாக நடந்து கொண்டதாகவும்  சரிவர ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

விசாரணைக் காவல் முடிந்து, கார்த்தி சிதம்பரம் இன்று பிற்பகல் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவரது தந்தை ப.சிதம்பரம் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இன்று அவசரமாக நாடு திரும்பினார்.

டெல்லி வந்தடைந்த அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார். கார்த்தி சிதம்பரத்தை ஜாமீனில் எடுப்பதற்கான வேலையை தொடங்கினார். கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக வாதாடிய காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் பெறும் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் கார்த்தி ஆஜர்படுத்தப்பட உள்ள கோர்ட்டுக்கு சென்றார். #tamilnews

Similar News