செய்திகள்

அரசு திட்டங்களின் செயல்பாடு பற்றி மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை

Published On 2018-06-11 19:03 GMT   |   Update On 2018-06-11 19:03 GMT
மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்து, மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். #NarendraModi
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் மோடி அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த திட்டங்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளன? அவற்றின் பலன் மக்களை முழுமையாக சென்று அடைந்து இருக்கிறதா? என்பது பற்றி பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) மந்திரிகள் குழுவுடன் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார். நாடாளுமன்ற இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

மந்திரிகள் குழு கூட்டம் நடந்து 7 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், இப்போது இந்த கூட்டம் நடைபெறுகிறது.

சமீபத்தில் உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், சில சட்டசபை தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் மந்திரிகள் குழு கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி இருப்பதால், இந்த பிரச்சினை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

போதிய மழை பெய்யாததால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அவற்றின் செயல்பாடு போன்றவை பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 
Tags:    

Similar News