செய்திகள்
பயணிகள் ரெயில் சேவை பாதிக்காது: பீதியை தவிர்க்கவும்- இந்தியன் ரெயில்வே வேண்டுகோள்
டெல்லி மாநிலம் ஒருவார ஊரடங்கை அமல்படுத்திய நிலையில், பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருவது வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஒருவித அச்சம் நிலவியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகமிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் முழு ஊரடங்கை அமல்படுத்தாமல், 144 தடை உத்தரவை பிறப்பித்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.
இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் ரெயில் சேவை ரத்து செய்ய வாய்ப்புள்ளது என்ற யூகச் செய்திகளும் வெளியாகி வருகின்றன. இதனால் பீதியடைந்த வெளிமாநில தொழிலாளர்கள் ரெயில் நிலையங்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இந்தியன் ரெயில்வே ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது. அதில் ‘‘வழக்கமான நிலையில் இந்திய ரெயில்வே பயணிகள் ரெயில்களை இயக்கி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், எந்தவொரு பீதி/யூகங்களை தவிர்க்கவும். உறுதி செய்யப்பட்ட டிக்கெட் அல்லது ஆர்ஏசி டிக்கெட் இருந்தால் ரெயில் நிலையத்திற்கு வாருங்கள். அனைத்து சமூக இடைவெளி முறையும் பின்பற்றவும்’’ எனத் தெரிவித்துள்ளது.