இந்தியா

கோவில் திருவிழாவில் யானைகள் இடையிலான மோதலில் சிக்கி 3 பக்தர்கள் பலி

Published On 2025-02-14 00:40 IST   |   Update On 2025-02-14 00:40:00 IST
  • யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.
  • இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கோகுல், பீதாம்பரம் ஆகிய வளர்ப்பு யானைகள் நெற்றிப்பட்டம் கட்டியவாறு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

சுவாமி வீதி உலா நடைபெற்றதை தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது வளர்ப்பு யானைகளான கோகுல், பீதாம்பரம் இடையே திடீரென ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.

இதைக்கண்ட பக்தர்கள் அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர். யானைகளைக் கட்டுப்படுத்த பாகன்கள் முயன்றனர். யானைகள் இடையிலான மோதலில் கோவில் அலுவலகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இந்நிலையில், யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் சிக்கி கெயிலாண்டி பகுதியைச் சேர்ந்த லீலா (65), அம்மு குட்டியம்மா (70), ராஜன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் 30-க்கும் அதிகமானோர் படுகாயம் டைந்தனர்.

தகவலறிந்து வந்த கோழிக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினர் பலியானோர் உடல்களைக் கைப்பற்றி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து கோழிக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் திருவிழாவில் யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News