மேற்கு வங்காளத்தில் சோகம்- பசுவை காப்பாற்ற முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மின்சாரம் தாக்கி பலி
- சத்தம் கேட்டு ஓடி வந்த மிதுன் மாட்டை காப்பாற்ற தண்ணீரில் இறங்கினார்.
- மிதுனின் கூச்சல் கேட்டு, தோட்டத்து குடிசையில் தங்கியிருந்த அவரது தந்தை ஓடிவந்தார்.
ஜல்பைகுரி:
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ளது தகிரிமாரி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த மிதுன் (வயது 30) என்பவர் வயலில் நேற்று தனது பசுவை மேய விட்டிருந்தார். அப்போது அருகில் தேங்கியிருந்த தண்ணீரில் மாடு இறங்கியது. அதில் மின்கம்பி அறுந்து கிடந்ததாக தெரிகிறது.
மின்சாரம் தாக்கியதால் மாடு அலறி கதறியது. சத்தம் கேட்டு ஓடி வந்த மிதுன் மாட்டை காப்பாற்ற தண்ணீரில் இறங்கினார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பலியானார்.
மிதுனின் கூச்சல் கேட்டு, தோட்டத்து குடிசையில் தங்கியிருந்த அவரது தந்தை பரேஷ் தாஸ்(60) ஓடிவந்தார். அவசரமாக அவரும் தண்ணீரில் இறங்கியதால் அவரும் மின்சாரம் தாக்கி இறந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி தீபாலி(55), மிதுனின் 2 வயது குழந்தை சுமனை கையில் தூக்கியபடி அவர்களை காப்பாற்ற சென்றார். அவரும் மின்சாரம் தாக்கி பலியானார்.
இந்த சோகம் நிகழ்ந்தபோது, மிதுனின் மனைவி மட்டும் வெளியே சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.