2 முறை தோல்வி: 3-வது முறை வெற்றி பெற்றதும் முதல்வர் பதவி- ரேகா குப்தாவின் பின்னணி...!
- 2007-ல் டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார்.
- 2015 மற்றும் 2020-ல் ஷாலிமார் பார்க் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இவர் முதல் முறையாக எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஷாலிமார் பார்க் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்த்னா குமாரியை 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார்.
என்றபோதிலும் இது இவருக்கு முதல் தேர்தல் இல்லை. 2015 மற்றும் 2020-ல் இதே தொகுதியில் பந்த்னா குமாரியிடம் தோல்வியடைந்திருந்தார். தற்போது 3-வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டு, வெற்றி பெற்றதும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரேகா குப்தாவின் வாழ்க்கை பின்னணியை பார்ப்போம்...
50 வயது ஆகும் ரேகா குப்தா அரியானா மாநிலம் சிந்து மாவட்டத்தில் உள்ள நந்த்கார்க் கிராமத்தில் 1974-ஆம் ஆண்டு ஜூலை 19-ந்தேதி பிறந்தார்.
ரேகா குப்தாவின் தந்தை வங்கி அதிகாரியாக பணியாற்றினார். இதனால் 1976-ம் ஆண்டு 2 வயதாகும்போது, அவரது குடும்பம் டெல்லிக்கு குடிபெயர்ந்தது.
டெல்லி பல்கலைகழகத்தில் படிக்கும்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர்கள் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷாத்தில் (ABVP) இணைந்தார்.
மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதன் காரணமாக, 1996-1997 காலகட்டத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தயால் சிங் கல்லூரியன் செயலாளராக இருந்துள்ளார்.
2000-ம் ஆண்டில் இருந்து பாஜக-வோடு ரேகா குப்தாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பாஜக-வின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவா மோர்ச்சாவில் சேர்ந்தார். டெல்லி பாஜக இளைஞர் பிரிவின் செயலாளராக பணியாற்றினார்.
சிறப்பாக செயல்படும் அவரது திறமைக்கு உடனடியாக கட்சியில் அங்கீகாரம் கிடைத்தது. இளைஞர் அணியின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். 2004 முதல் 2006 வரை தேசிய செயலாளராக இருந்தார்.
கட்சி அமைப்புகளுக்கான வலுவான திறமையும், கட்சியின் நோக்கத்திற்கான அர்ப்பணிப்பும் பாஜக-வில் முக்கிய இடம பிடிக்க உதவியது.
2007-ல் டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார். வடக்கு பிதாம்பூரா தொகுதிக்குப்பட்ட இடத்தில் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டெல்லி மாநகராட்சியின் பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கமிட்டி தலைவராக 2007 முதல் 2009 வரை பதவி வகித்துள்ளார்.
பாஜக-வின் டெல்லி பெண்கள் பிரிவு பொதுச் செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.