ஓரினச்சேர்க்கையாளர் விவகாரம்... திருமணத்திற்கு இது அவசியமா? ட்விஸ்ட் வைக்கும் தலைமை நீதிபதி
- உச்ச நீதிமன்றத்தில் மூன்றாவது நாளாக இன்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
- ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் நிலையான உறவில் கூட இருப்பார்கள் என்பதை அங்கீரித்துள்ளதாக தலைமை நீதிபதி தகவல்
புதுடெல்லி:
ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகள் முதலில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. பின்னர், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
அதன்படி அரசியல் சாசன அமர்வில் கடந்த 18ம் தேதி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கலாமா? என்பது தொடர்பாக இன்று மூன்றாவது நாளாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இன்றைய விசாரணையின்போது தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறியதாவது:-
ஒரே பாலின உறவுகளை வெறும் உடல் உறவுகளாக மட்டும் பார்க்காமல், நிலையான உணர்ச்சிபூர்வமான உறவாக பார்க்கிறோம். ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க, திருமணம் குறித்த கருத்தை மறுவரையறை செய்ய வேண்டும். திருமணத்திற்கு இரு வேறு பாலினத்தைச் சேர்ந்த துணைவர்கள் அவசியமா?
1954 ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து, கடந்த 69 ஆண்டுகளில் இந்தச் சட்டம் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் அடைந்துள்ளது. ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்கும்போது, ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயது வந்தவர்கள் சம்மதத்துடன் கூடிய உறவை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் நிலையான உறவில் கூட இருப்பார்கள் என்பதையும் அங்கீரித்துள்ளோம்.
அதேசமயம் நான் ஏற்கனவே கூறியதுபோல் இது முழுமையானது அல்ல. இதுபோன்ற திருமணங்களுக்கு கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புகள் வரும் அபாயமும் உள்ளது. ஒரே பாலின ஜோடியின் குழந்தை சாதாரண சூழ்நிலையில் வளருமா?
இவ்வாறு தலைமை நீதிபதி தனது கருத்தை தெரிவித்தார். இனி திங்கட்கிழமை தொடர்ந்து வாதம் நடைபெறும்.
இந்த விசாரணை உச்ச நீதிமன்ற இணையதளம் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.