வழுக்கை தலையில் முடிவளரும் எனக்கூறி லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய 'பலே' ஆசாமி
- தலையில் சிறிய ‘பிரஷ்’ மூலம் எண்ணெயை தேய்த்து அனுப்பி வைத்தார் சல்மான்.
- சல்மான் நடத்திய முகாமில் எண்ணெய் தேய்த்துக் கொண்ட பலருக்கும் உச்சந்தலையில் கடுமையான அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டது.
மீரட்:
போர், பயங்கரவாதம், பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றம் என உலகம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், இன்றைய வாலிபர்களை பெரிதும் வாட்டி வதைக்கும் விஷயம் முடி உதிர்தல் என்றால் அது மிகையாகாது.
குறிப்பாக வழுக்கை தலையில் மீண்டும் முடியை வளர வைக்க எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள் வாலிபர்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி பேர்வழிகள் நூதன முறைகளில் வாலிபர்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.
அப்படி ஒரு நூதன மோசடி உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் அரங்கேறியுள்ளது.
சல்மான் என்பவர் தன்னிடம் உள்ள எண்ணெயை தேய்த்தால் வழுக்கை தலையில் விரைவாக முடி வளரும் என்றும், ஒரு முறை அந்த எண்ணெயை தேய்த்துக் கொள்ள வெறும் ரூ.20 மட்டுமே என்றும் செய்தித்தாளில் விளம்பரம் செய்தார். முகாம் நடைபெறும் முகவரியையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதை நம்பி நூற்றுக்கணக்கான வாலிபர்கள் அங்கு குவிந்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு கூட்டம் திரண்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த வாலிபர்கள் ஒவ்வொருவரிடமும் ரூ.20 பெற்றுக்கொண்டு அவர்களின் தலையில் சிறிய 'பிரஷ்' மூலம் எண்ணெயை தேய்த்து அனுப்பி வைத்தார் சல்மான்.
இதில் வேடிக்கை என்னவெனில் வழுக்கை தலையில் முடி வளரும் எனக் கூறி வாலிபர்களின் தலையில் எண்ணெய் தேய்த்துவிட்ட சல்மானுக்கும் வழுக்கை தலை தான். ஆனால் முகாமுக்கு வந்திருந்த வாலிபர்கள் யாரும் அதைப்பற்றி சிந்திக்கவில்லை.
இந்த நிலையில் சல்மான் நடத்திய முகாமில் எண்ணெய் தேய்த்துக் கொண்ட பலருக்கும் உச்சந்தலையில் கடுமையான அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டது. அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஷதாப் என்பவர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சல்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் வழுக்கை தலையில் முடி வளரும் என பொய்யான வாக்குறுதி அளித்து பணம் சுருட்டியது தெரியவந்தது. இதற்கு முன்னர் டெல்லி, உத்தரகாண்ட், அரியானா ஆகிய மாநிலங்களிலும் இதேபோல போலி முகாம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சுருட்டியது தெரிய வந்தது. இதனையடுத்து சல்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.