அதிர்வலையை கிளப்பிய ஐ.டி. ஊழியர் தற்கொலை.. தலைமறைவான மனைவி வீட்டார் 3 நாளில் ஆஜராக போலீஸ் நோட்டீஸ்
- மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார்.
- திருமண தகராறு வழக்குகளில் கொடுமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து சுப்ரீம் கோர்ட் எச்சரித்தது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மரணத்துக்கு முன் செய்யவேண்டியவை என்று அட்டவணை போட்டு அதை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கடைசியில் அவர் தற்கொலை செய்துள்ளார்.
24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
விவாகரத்து பெற்ற மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார். மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
பெங்களூரு போலீஸ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில் சுபாஷ் தற்கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் சுபாஷின் தற்கொலையை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
எனவே நிகிதா சிங்கானியா குடும்பத்தினர் எங்கிருந்தாலும் 3 நாட்களுக்குள் போலீசில் ஆஜராக வேண்டும் என உத்தரப் பிரதேசம் சென்ற பெங்களூரு போலீஸ் அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
அந்த நோட்டீஸில், கிடைத்த ஆதாரங்கள் மற்றும் தரவுகள் அடிப்படையிலும் சம்பவ சூழ்நிலை காரணமாக உங்களிடம் விசாரணை செய்யவேண்டியது அவசியமாக உள்ளது.
எனவே நீங்கள் எங்கிருந்தாலும் பெங்களூரில் உள்ள விசாரணை அதிகாரி முன் இன்னும் 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
இதற்கிடையே டிசம்பர் 11 அன்று உச்ச நீதிமன்றம், தங்கள் கணவர்களுக்கு எதிராக பெண்கள் தாக்கல் செய்யும் திருமண தகராறு வழக்குகளில் கொடுமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து எச்சரித்தது.
செவ்வாயன்று நடைபெற்ற வேறு ஒரு விவாகரத்து வழக்கில், நிரந்தர ஜீவனாம்சத் தொகையை நிர்ணயிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய எட்டு அளவுகோல்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.