இந்தியா

அரசு டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு - கர்நாடக அரசின் திட்டத்துக்கு பாஜக எதிர்ப்பு

Published On 2025-03-05 19:22 IST   |   Update On 2025-03-05 19:22:00 IST
  • நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சரவையில் கர்நாடக அரசு சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
  • காங்கிரஸைப் பொறுத்தவரை, சிறுபான்மையினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமே.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அரசு டெண்டர்களில் பட்டியல் சாதியினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு இருந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த மாதம், முஸ்லிம் எம்எல்ஏக்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் அடங்கிய குழு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி முதல்வர் சித்தராமையாவிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தது. இந்த திட்டத்தை பரிசீலித்து வரும் அரசு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சரவையில்  சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை குறிப்பிட்டு கர்நாடக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், மாநிலம் முழுவதும் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் முடங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு ஒப்பந்தங்களில் சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது.

பாஜக இந்த நடவடிக்கையை எதிர்க்கும், இது திருப்திப்படுத்தும் அரசியல். எஸ்சி மற்றும் எஸ்டிக்கு இடஒதுக்கீடு உள்ளது, ஆனால் கர்நாடகாவில் வளர்ச்சி என்ன? காங்கிரஸைப் பொறுத்தவரை, சிறுபான்மையினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமே. பாஜக இதை அவையில் எதிர்க்கும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News