பாட்டியின் வங்கிக்கணக்கு பற்றி பள்ளியில் பெருமையடித்த மாணவி.. பணத்தை உருவ இளைஞர்கள் செய்த பலே மோசடி
- சிறுமியின் புகைப்படத்தை வாங்கி அதை மார்பிங் செய்து சிறுமியை மிரட்டி பணம் பறிக்கத்தொடங்கியுள்ளான்.
- சிறுமி தனது பாட்டியின் வங்கிக்கணக்கில் நெட் பேங்கிங் பயன்படுத்தி வந்துள்ளார்.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள பள்ளியொன்றில் படித்து வந்த 15 வயது சிறுமி தனது பாட்டியின் வங்கிக்கணக்கில் நெட் பேங்கிங் பயன்படுத்தி வந்துள்ளார். பாட்டியின் கணக்கில் நிறைய பணம் இருந்துள்ளது. பாட்டியின் கணக்கை பயன்படுத்துவது பற்றி சிறுமி தனது பள்ளித் தோழர்களிடம் கூறியுள்ளார்.
அவர்களின் ஒரு மாணவன் இதை தனது மூத்த சகோதரனிடம் கூறியுள்ளான். அந்த சகோதரன் தனது நண்பர்களுடன் இணைந்து சதித்திட்டம் ஒன்றை தீட்டியுள்ளான். சிறுமியின் சமூக வலைதள கணக்கை அறிந்து அவருடன் நட்பாக அந்த இளைஞன் பழகியுள்ளான்.
சிறுமியின் புகைப்படத்தை வாங்கி அதை மார்பிங் செய்து சிறுமியை மிரட்டி பணம் பறிக்கத்தொடங்கியுள்ளான். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்த மோசடி தொடங்கி சுமார் 8 மாத காலங்களாக நடந்து வந்திருக்கிறது.
இளைஞன் கேட்ட போதல்லாம் சிறுமி ரூ.1000 முதல் ரூ.1 லட்சம் வரை தனது பாட்டியின் கணக்கிலிருந்து தனது செல்போன் நெட் பேங்கிங் மூலம் பரிவர்த்தனை செய்துள்ளாள். இவ்வாறு சுமார் ரூ.50 லட்சம் வரை சிறுமியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் பாட்டியின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் போகவே, சிறுமி படித்து வந்த டியூசன் சென்டருக்கு சென்று அந்த இளைஞன் மிரட்டியுள்ளார். இதை கண்ட டியூசன் டீச்சர் சிறுமியிடம் விசாரித்ததில் உண்மை வெளிவந்துள்ளது.
சிறுமியின் குடும்பத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பரில் விசாரணை தொடங்கியதிலிருந்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய குற்றவாளி நவீன் (28) நேற்று கைது செய்யப்பட்டான். நவீனிடமிருந்து ரூ.5 லட்சத்தையும், ஒரு டெபிட் கார்டையும் போலீசார் மீட்டனர். நவீன் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
சிறுமியிடம் மோசடியாகப் பெறப்பட்ட தொகையில் இதுவரை ரூ.36 லட்சம் மீட்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.