டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவம்- 5 அதிகாரிகள் பணியிட மாற்றம்
- ரெயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல குவிந்த பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- ரெயில்வே மண்டல மேலாளர், கூடுதல் மேலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. கோடிக்கணக்கான மக்கள் இதில் புனித நீராடினர்.
கடந்த மாதம் டெல்லி ரெயில் நிலையத்தின் நடைமேடை 13, 14, 15-ல் நின்றிருந்த உத்தர பிரதேச மாநிலம் செல்லும் ரெயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்டம் கூடியது. இதனால் கும்பமேளாவுக்கு செல்ல குவிந்த பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த ரெயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் பலியான விவகாரத்தில் ரெயில்வே மண்டல மேலாளர், கூடுதல் மேலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கோட்ட ரெயில்வே மேலாளர் சுக்விந்தர் சிங், கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் விக்ரம் சிங் ராணா மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் உதவி பாதுகாப்பு ஆணையர் மகேஷ் சந்த் சைனி, ரெயில் நிலைய இயக்குநர் மகேஷ் யாதவ், முதுநிலை பிரிவு வணிக மேலாளர் ஆனந்த் மோகன் ஆகியோரை இடமாற்றம் செய்து ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.