உத்தர பிரதேச சட்டசபையில் குட்கா பயன்படுத்த தடை: மீறினால் ரூ.1000 அபராதம்
- சட்டசபையில் நுழைந்த சபாநாயகர் சதீஷ் மஹானா எச்சில் கறைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- இதுபோன்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை எம்.எல்.ஏ.க்கள் தடுக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
லக்னோ:
உத்தர பிரதேச சட்டசபையில் சில எம்.எல்.ஏ.க்கள் பான் மசாலாவை மென்று எச்சில் துப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டசபையில் நுழைந்த சபாநாயகர் சதீஷ் மஹானா எச்சில் கறைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, எச்சில் கறைகளை சுத்தம் செய்யவேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை எம்.எல்.ஏ.க்கள் தடுக்கவேண்டும் என்றும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.
மேலும், இந்த செயலை செய்த எம்.எல்.ஏ. தாமாக முன் வந்து செயலை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், உத்தர பிரதேச சட்டசபையில் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்து சபாநாயகர் சதீஷ் மஹானா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பிறகு பேசிய சபாநாயகர், சட்டசபை வளாகத்திற்குள் ஊழியர்கள், அதிகாரிகள் அல்லது வேறு எந்த தனிநபர்கள் உட்பட எவரும் குட்கா அல்லது பான் மசாலா உட்கொள்வது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். விதிகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.