இந்தியா

உங்களுக்கெல்லாம் தர முடியாது.. வங்கியில் பணம் எடுக்க சென்ற இஸ்லாமிய பெண்.. காசாளர் அடாவடி - வீடியோ

Published On 2025-03-05 14:48 IST   |   Update On 2025-03-05 15:01:00 IST
  • காசாளரின் செயலை பெண்ணின் மகன் தனது மொபைலில் வீடியோ எடுக்க முயன்றபோது அவரது செல்போனை பறிக்க காசாளர் முயன்றுள்ளார்.
  • தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாத குழந்தை அலிஸ்பா மீது போலீசார் பூட்ஸ் காலால் மிதித்ததாகக் கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் பொதுத்துறை வங்கி ஒன்றின் கிளை அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கள்கிழமை நஜ்மா கானம் என்ற இஸ்லாமிய பெண்மணி தனது கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் எடுக்க வந்தார். வயதான காரணத்தால் அப்பெண் துணைக்கு உடன் தனது மகனையும் அழைத்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு பணம் வழங்க முடியாது என்று வங்கியின் காசாளர் மனோஜ் குமார் மறுத்துள்ளார்.  கணக்கில் உள்ள பணத்தை தர மறுப்பது ஏன் என பெண்ணும் அவரது மகனும் கேட்க, காசாளர் மனோஜ் குமார் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்.

காசாளரின் செயலை பெண்ணின் மகன் தனது மொபைலில் வீடியோ எடுக்க முயன்றபோது அவரது செல்போனை பறிக்க காசாளர் முயன்றுள்ளார். மேலும் வங்கியின் மேலாளர் அறைக்கு பெண்ணும் அவரது மகனும் இதுகுறித்து புகார் அளிக்க சென்றனர். அங்கும் வந்த காசாளர் மனோஜ் குமார் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இஸ்லாமியர் ஒருவருக்கு அவரது கணக்கில் இருக்கும் பணத்தை தர அரசு வங்கி ஒன்று மறுத்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வார் மாவட்டத்தில் நாகாவான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் இணைய மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரை கைது செய்ய காவல்துறையினர் இஸ்லாமியர் ஒருவர் வீட்டிற்குச் சென்றனர்.

அங்கு கட்டிலில் தனது தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாத குழந்தை அலிஸ்பா மீது போலீசார் பூட்ஸ் காலால் மிதித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. குழந்தையின் தாய் அவர்களை எதிர்த்தபோது அவரையும் வீட்டை விட்டு போலீசார் வெளியே தள்ளினர்.

இந்தச் சோதனையின்போது பெண் போலீஸ் யாரும் உடன் வரவில்லை என்றும் சம்பந்தப்பட்ட 2 போலீஸ் அதிகாரிகளைக் கைது செய்யவேண்டும் என்றும் குடும்பத்தினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tags:    

Similar News