கண்ணூரில் பெண்கள் சிறைச்சாலை மீது இரவில் பறந்த டிரோன்- போலீசார் விசாரணை
- பெண்கள் சிறைச்சாலையின் அலுவலக கட்டிடத்திற்கு மேலே 25 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் பறந்துள்ளது.
- டிரோன் பறந்த நாளில் அந்த பகுதியில் திருமணமோ வேறு எந்த விழாவோ நடைபெறவில்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூரில் மத்திய சிறை உள்ளது. இதன் அருகே மாவட்ட சிறை மற்றும் ஒரு சிறப்பு துணை சிறைச்சாலை உள்ளது. இவற்றுக்கு பின்னால் பெரிய சுவர்களை கொண்ட பெண்கள் சிறையும் உள்ளது.
இங்கு சம்பவத்தன்று இரவு ஒரு டிரோன் 2 முறை பறந்து சுற்றி வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர் பாதுகாப்பு கொண்ட பெண்கள் சிறைச்சாலையின் அலுவலக கட்டிடத்திற்கு மேலே 25 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் பறந்துள்ளது.
முதலில் சிறை ஊழியர்கள் இதனை சாதாரணமாகத்தான் கருதினர். ஆனால், 2 முறை அந்த கட்டிடத்தை சுற்றி வந்த டிரோன், சிவப்பு மற்றும் பச்சை விளக்குகளை ஒளிரச் செய்து விட்டு மறைந்தது தான் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சிறை ஊழியர்கள், கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் மற்றும் விழாக்களின்போது டிரோன் பறக்க விட்டு படம் எடுப்பது வழக்கம்.
பெண்கள் சிறைச்சாலையின் மேலே டிரோன் பறந்த நாளில் அந்த பகுதியில் திருமணமோ வேறு எந்த விழாவோ நடைபெறவில்லை. எனவே டிரோன் பறந்தது ஏன்? அதனை பறக்க விட்டது யார்? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.