இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா- அமித்ஷா, ஜே.பி. நட்டா வாழ்த்து
- ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில், சிலிர்க்க வைக்கும் வெற்றி பெற்ற நம்முடைய வீரர்களுக்கு வாழ்த்துகள்.
- வெற்றிக்கான தருணம் தொடர்வதற்கு அவர்களை வாழ்த்துவதுடன், கோப்பையை கொண்டு வரவும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டு உள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்தது.
இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை, பல இடங்களில் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்திய அணியின் அபார வெற்றி பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், திறமை மற்றும் மனவுறுதியுடனான மிக சிறந்த ஆட்டம். முழக்கத்துடன் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில், சிலிர்க்க வைக்கும் வெற்றி பெற்ற நம்முடைய வீரர்களுக்கு வாழ்த்துகள்.
நாட்டை பெருமையடைய செய்துள்ளீர்கள். இறுதி போட்டியில் சிறப்பாக விளையாட வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று மத்திய மந்திரி ஜே.பி. நட்டா வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், இறுதி போட்டிக்கு முன்னேற்றம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், பாராட்டத்தக்க வெற்றியை பெற்ற இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்.
இந்திய அணி மீண்டும் ஒரு முறை தனித்துவம் வாய்ந்த குழுப்பணி, மனவுறுதி மற்றும் சிறந்த தரம் ஆகியவற்றை வெளிப்படுத்தி உள்ளது. இந்த வெற்றிக்கான தருணம் தொடர்வதற்கு அவர்களை வாழ்த்துவதுடன், கோப்பையை கொண்டு வரவும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டு உள்ளார்.