ஆழ்கடல் கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை திரும்பப்பெற வேண்டும்: கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
- ஆழ்கடல் கனிம சுரங்கத்தை தொடங்குவதற்கான மையங்களை அனுமதிக்க முடியாது என கேரள அரசு தெரிவித்தது.
- இது தொடர்பாக மாநில மீனவர்களின் கவலையை மத்திய அரசுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் ஆழ்கடல் கனிமச் சுரங்கத்தை அனுமதிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கேரள சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல் மந்திரி பினராயி விஜயன் ஆளும் முன்னணியின் ஏஜெண்டாக செயல்படுவதாக குற்றம்சாட்டி சபாநாயகர் முன் எதிர்க்கட்சியான யுடிஎப் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்திய நிலையில், முதல் மந்திரி கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசனை தனது உரையை முடிக்க அனுமதிக்காததாலும், ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க அவையை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததாலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தால் ஆழ்கடல் சுரங்கத் தீர்மானம் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.
மாநில கடற்கரையோரத்தில் ஆழ்கடல் சுரங்கத்தைத் தொடங்குவதற்கான மையங்களை அனுமதிக்க முடியாது என கேரள அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக மாநில மீனவர்களின் கவலையை மத்திய அரசுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளது.